லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது; சரத்பவார் கருத்து


லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது; சரத்பவார் கருத்து
x
தினத்தந்தி 27 Jun 2020 8:08 PM GMT (Updated: 27 Jun 2020 8:08 PM GMT)

லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

சதாரா, 

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா சார்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே பெரும் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாகவும், இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்திருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கு மோதலை ராணுவ மந்திரியின் தோல்வியாக உடனடியாக முத்திரை குத்த முடியாது. ஏனெனில் இந்திய வீரர்கள் ரோந்துப்பணியின் போது மிகுந்த உஷாராகவே இருந்தனர். ஒட்டுமொத்த இந்த சம்பவமும் சிக்கலானது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது எல்லைக்குள் சாலை அமைத்து வருவதாகவும் ராணுவ மந்திரி கூறியிருக்கிறார்.

என்ன நடந்திருக்கிறது என்றால், சீனப்படைகள் நமது சாலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர். இதை நமது வீரர்கள் தடுத்ததால் உடல் ரீதியான மோதல் ஏற்பட்டது. இது யாருடைய தவறும் இல்லை. நீங்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது யாரும் உங்கள் பகுதிக்குள் நுழைந்தால் மோதல் நடைபெறத்தான் செய்யும். இதை டெல்லியில் இருக்கும் ராணுவ மந்திரியின் தவறு என சொல்ல முடியாது.

அங்கு ரோந்துப்பணிகள் நடந்து இருக்கிறது. அப்போது மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இது நமது படைகள் உஷாராக இருந்ததையே காட்டுகிறது. இல்லையென்றால் சீன படைகள் வந்து சென்றதை கூட நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே இந்த சூழலில் இது தொடர்பாக குற்றம் சாட்டுவது நல்லதல்ல.

1962-ம் ஆண்டு போருக்குப்பின்கூட இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை சீனா பறித்துக்கொண்டது. அதை யாரும் மறக்க முடியாது. அந்த பகுதி இன்னு சீனாவிடம்தான் இருக்கிறது. அவர்கள் தற்போதும் சில பகுதியை ஆக்கிரமித்துள்ளார்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு குற்றச்சாட்டு வைத்தால், முதலில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது என்ன நடந்திருந்தது என்பதையும் பார்ப்பேன். அத்தகைய பெரிய நிலம் அப்போது ஆக்கிரமித்து இருந்தால், அதை புறக்கணிக்க முடியாது.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம். எனவே இதை அரசியலாக்கக்கூடாது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Next Story