‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’ பிரதமர் மோடி பெருமிதம்


‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’ பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 27 Jun 2020 11:45 PM GMT (Updated: 27 Jun 2020 10:09 PM GMT)

இந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பாதிரியார் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-


பாதிரியார் ஜோசப் மார் தோமா சமுதாயம் மற்றும் தேசத்தின் மேம்பாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். வறுமையை ஒழிக்கவும் அவர் பாடுபடுகிறார்.

இந்திய அரசு சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்டுவது இல்லை. இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. 130 கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற விருப்பத்துடன் அரசு பணியாற்றுகிறது. டெல்லியில் அரசு அலுவலகங்களில் அமர்ந்து முடிவுகளை எடுக்காமல் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின்படி முடிவுகளை எடுக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கி கணக்கு இருப்பதை உறுதி செய்து இருக்கிறோம்.


கொரோனாவின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட முக்களுக்கு உதவுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் நிலைமை திருப்திகரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடையும் விகிதம் நம் நாட்டில் அதிகரித்து இருக்கிறது.

இந்த நோய்த்தொற்றை ஒழிக்க மக்கள் போராடுகிறார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டுவிடக்கூடாது. உண்மையிலேயே நாம் இன்னும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story