இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 10:26 PM GMT (Updated: 27 Jun 2020 10:26 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளின் சிகிச்சையில் புதிய மருந்தை சேர்த்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளின் சிகிச்சையில் புதிய மருந்தை சேர்த்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை மருந்தில்லா நோயாகத்தான் நீடிக்கிறது. இதற்கான சிகிச்சையில் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் இப்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை காப்பாற்ற வேண்டிய அத்தியாவசிய தேவை எழுந்துள்ளது. இதை உலக நாடுகள் அனைத்தும் புரிந்து கொண்டு, ஏற்கனவே பிற நோய்களுக்கு தந்து உபயோகத்தில் இருக்கிற மருந்துகளையும் தந்து சோதித்து வருகின்றன.

அப்படித்தான் இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தரப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு தரலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதேபோன்று வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும் கொரோனா நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ந் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அல்லது அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கக்கூடியதாகும்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு மிதமாக இருக்கிற சூழலில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் புதிய மருந்தை மத்திய சுகாதார துறை சேர்த்துள்ளது. இந்த மருந்தின் பெயர், டெக்ஸாமெத்தாசோன் என்பதாகும். இந்த மருந்து மலிவானது. இந்தியாவில் நுரையீரல் தொற்று நோய்களுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மருந்தை மிதமான மற்றும் நோய் தீவிரமான நிலையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்துக்கு மாற்று மருந்தாக இதை பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சிகிச்சையில் டெக்ஸாமெத்தாசோன் மருந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றிய சான்றுகளை ஆராய்ந்தும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பரிசீலித்தும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த அமைச்சகம் பிறப்பித்துள்ள கொரோனா சிகிச்சை வழிகாட்டும் நெறிமுறைகள்படி, தொற்றின் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து அரை மில்லிகிராம் முதல் 1 மில்லிகிராம் வரையிலும் தரலாம் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.1 மில்லிகிராம் முதல் 0.2 மில்லிகிராம் வரையில் தரலாம். 3 நாட்களுக்கு தரலாம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 48 மணி நேரத்தில் தரலாம். ஆக்சிஜன் தேவை அதிகரித்தாலும் இந்த மருந்தை கொடுக்கலாம்.

நோயாளிகள் சுவாச கோளாறால் அல்லல்பட்டு வென்டிலேட்டரில் வைக்கிற தேவை எழுகிறபோது, ஏற்கனவே கொடுக்கப்படாத நிலையில், ஒரு நாளுக்கு மெத்தில்பிரிட்னிசோலோன் மருந்து 1 மில்லிகிராம் முதல் 2 மில்லிகிராம் வரையிலும் தரலாம் அல்லது டெக்ஸாமெத்தாசோன் 0.2 மில்லிகிராம் முதல் 0.4 மில்லிகிராம் வரையில் தரலாம். இரு பிரிக்கப்பட்ட அளவுகளில் இந்த மருந்தை 5 முதல் 7 நாட்களுக்கு தரலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த குளுக்கோகார்ட்டிகாய்டு மருந்தை அதிகளவில் கொடுத்தால், பெரிய அளவிலான நோய் எதிர்ப்பு தடுப்பு விளைவுகள் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றை அகற்றுவதை தாமதப்படுத்தி விடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டெக்ஸாமெத்தாசோன் மருந்தை கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு தரலாம் என்பதை சோதித்து கண்டறிந்த பெருமை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளுக்கு சேரும்.

கொரோனா வைரஸ் தொற்றால் அவதியுறுகிற நோயாளிகளுக்கு இது உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு, மிகப்பெரிய மருத்துவ விஞ்ஞான சாதனை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டியதுடன், உடனடியாக அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இது வென்டிலேட்டர்களின் கீழ் வைக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புவீதத்தை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விடும் என்று உலக சுகாதார நிறுவனத்திடம் இங்கிலாந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பதில் இந்த மருந்து முக்கிய பங்களிப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



Next Story