லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி - பிரதமர் மோடி பெருமிதம்


லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 28 Jun 2020 11:45 PM GMT (Updated: 28 Jun 2020 7:22 PM GMT)

லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்‘ என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதேபோல் நேற்றும் அவர் உரை நிகழ்த்தினார்.

அப்போது, லடாக் எல்லையில் சமீபத்தில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், லடாக்கில் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டதாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.

மோடி பேசுகையில் கூறியதாவது:-

இந்தியா நட்புறவை விரும்பும் நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. தனது எல்லை மற்றும் இறையாண்மையை காப்பதில் இந்தியா உறுதிபூண்டு இருக்கிறது. இது உலக நாடுகளுக்கே தெரியும்.

லடாக்கில் இந்திய மண்ணின் மீது கெட்ட நோக்கத்துடன் கண் வைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாம் நட்புறவை மதிக்கிறோம். அதேசமயம் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபடுவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. எல்லையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

நாட்டின் பெருமைக்கு எந்த பங்கமும் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்பதை தீரமிக்க இந்திய வீரர்கள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள். அவர்களின் வீரமே இந்தியாவின் பலம். அவர்களுடைய தியாகம் என்றும் நினைவில் கொள்ளப்படும். உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் இந்தியா தலைவணங்குகிறது.

இந்திய வீரர்களின் தியாகம் தேசப்பற்றை மேலோங்கச் செய்து இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் பெற்றோர்கள் தங்கள் மற்ற மகன்களையும் நாட்டை பாதுகாக்கும் பணிக்கு அனுப்ப விரும்புகிறார்கள். பீகாரைச் சேர்ந்த சாகீத் குந்தன் குமார், தாய்நாட்டை பாதுகாப்பதற்காக தனது பேரனையும் ராணுவத்தில் சேர்க்க விரும்புவதாக கூறி உள்ளார்.

அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடைய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நோக்கம். தற்சார்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. அனைவரும் உள்நாட்டில் தயாராகும் பொருட்களையே வாங்க வேண்டும். இதுவே வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி ஆகும். ஒவ்வொருவரும் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நாட்டை பலப்படுத்த முடியும். மக்களின் ஒத்துழைப்பு இன்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது.

கிழக்கு லடாக்கில் நடந்த சம்பவத்தை பார்த்த பிறகு, இனி இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டுமே வாங்குவது என தீர்மானித்து இருப்பதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்னிஜி என்ற பெண் கடிதம் எழுதி இருக்கிறார். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு தகவல்கள் வந்து உள்ளன.

மதுரையைச் சேர்ந்த மோகன் ராமமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாதுகாப்பு துறையில் இந்தியா முன்னணியில் இருந்த நிலையில், அப்போது பின்தங்கி இருந்த பல நாடுகள் தற்போது நம்மை முந்திவிட்டன. சுதந்திரத்துக்கு பின்னர் பாதுகாப்பு துறை உற்பத்தியில் (ராணுவ தளவாட உற்பத்தி) நாம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். ஆனால் செலுத்தவில்லை.

ஆனால் இப்போது ராணுவ தளவாட உற்றபத்தி மற்றும் தொழில்நுட்ப துறையில் தன்னிறைவை அடைவதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறோம். சுரங்கம், விண்வெளி ஆய்வு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை செய்து இருக்கிறோம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியா தன்னிறைவை நோக்கி செல்வதற்கும், தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையவும் வழிவகுக்கும்.

இந்தியா ஆன்மீக தேசம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான பாரம்பரிய மருந்துகளை நம் நாட்டில் இயற்கையாகவே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்பது நமக்கு தெரியும். இதை வெளிநாட்டினரும் உணர்ந்து கொண்டு உள்ளனர். இதனால் ஆசிய நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவிலும் இவற்றின் தேவை அதிகரித்து இருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையின் மூலம் அறிந்தேன்.

கொரோனா பாதிப்பு நம் வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறது. கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்பது பற்றிதான் இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். பல சவால்கள் நிறைந்த 2020-ம் ஆண்டு எப்போது முடிவடையும் என்று மக்கள் நினைக்கின்றனர். கடந்த காலத்தில் இந்தியா பல்வேறு சவால்களையும், பேரழிவுகளையும் சந்தித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறது. தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் கிழக்கு கடற்கரை பகுதியை ஆம்பன் புயல் தாக்கியது. இதேபோல் மேற்கு கடற்கரை பகுதியையும் ஒரு புயல் தாக்கியது. பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. சவால்கள் ஏற்படும் போது நாம் வலிமையானவர்களாக மாறுகிறோம்.

கடந்த காலங்களில் வெற்றி கொண்டது போல் இப்போது ஏற்பட்டுள்ள சாவால்களையும் நம்மால் வெற்றிகொள்ள முடியும். ஆண்டின் முதல் 6 மாதங்கள் கடினமாக இருந்ததால், மீதம் உள்ள 6 மாதங்களும் அப்படித்தான் இருக்கும் என்று கூற முடியாது. கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சமயத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இல்லையேல் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதோடு, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story