இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு


இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 11:15 PM GMT (Updated: 28 Jun 2020 9:24 PM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி 16 ஆயிரத்தை கடந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்குக்கு பின்னர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் ‘அன்லாக்-1’ என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அவை இந்த மாத தொடக்கம் முதல் அமலுக்கு வந்தன. சரிந்து வந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கிய பின்னர் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்தாற்போல தொற்று புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்று தொடர்ந்து 5-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் மொத்தம் 19 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் நாடு முழுவதும் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 ஆனது.தொற்று பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆகவும், மூன்றாம் இடம் வகிக்கிற தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆகவும் இருக்கிறது. தமிழகத்தை தொடர்ந்து குஜராத்தில் 30 ஆயிரத்து 709 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 21 ஆயிரத்து 549 பேருக்கும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 944 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 16 ஆயிரத்து 711 பேருக்கும் தொற்று இருக்கிறது.

மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ள மாநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா (13,436). அரியானா (13,427), மத்திய பிரதேசம் (12,965), ஆந்திரா (12,285), கர்நாடகம் (11,923) ஆகியவை உள்ளன. கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 410 ஆகும். இதில் மராட்டியத்தில் அதிகபட்சமாக 167 பேரும், தமிழகத்தில் 68 பேரும், டெல்லியில் 66 பேரும் இறந்துள்ளனர்.

பிற மாநிலங்களை பொறுத்தவரையில் உத்தரபிரதேசத்தில் 19 பேரும், குஜராத்தில் 18 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 பேரும், ராஜஸ்தான், கர்நாடகத்தில் தலா 11 பேரும், ஆந்திராவில் 9 பேரும், அரியானாவில் 7 பேரும், பஞ்சாப், தெலுங்கானாவில் தலா 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேரும், பீகார், ஒடிசா மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பக்கம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணம் அடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. அந்த வகையில் தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக இருக்கிறபோது, குணம் அடைந்தோரின் எண்ணிக்கை அதை விட 1 லட்சம் அதிகரித்து 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவோரின் அளவு 58.56 சதவீதமாக உள்ளது. இது மாநிலங்களுடன் சேர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் விளைவாக நடந்திருப்பதாகவும், இது ஊக்கம் அளிக்கத்தக்க விதத்தில் அமைந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி, கோவா, ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் சேரப்போவதாக அறிவித்துள்ளன.

மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொற்று பரவல் அசுரவேகம் எடுத்துள்ள நிலையில், மும்பை மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் நடை பயிற்சிக்கோ, கடைகளுக்கோ, சலூன் கடைகளுக்கோ செல்ல தடை விதித்துள்ளது. 2 கி.மீ. தொலைவை கடந்து அலுவலகம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக செல்ல முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் கொரோனா நெருக்கடி முடிவுக்கு வராததால் கட்டுப்பாடுகள் வரும் 30-ந் தேதிக்கு பின்னரும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து காட்டுத்தீ போல கொரோனா பரவும்நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 218-ல் இருந்து 417 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி, 2,45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், பெங்களூருவில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story