வந்தே பாரத் திட்டம் : ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு; இந்தியர்கள் தவிப்பு


வந்தே பாரத் திட்டம் : ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு;  இந்தியர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 8:17 AM GMT (Updated: 29 Jun 2020 8:17 AM GMT)

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்புவதற்காக விமான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து செல்கின்றன. அந்தவகையில் இந்தியாவும் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

‘வந்தே பாரத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் 3 கட்டங்களாக நூற்றுக்கணக்கான விமானங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 4-வது கட்ட வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்த சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதில் மொத்தமாக 170 விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்காளதேசம், தாய்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் ஆகிய 17 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கு 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன.மூன்றாவது கட்ட வந்தே பாரத் திட்டம் கடந்த 10-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிகிறது. இதில் பல்வேறு நாடுகளுக்கு 495 விமானங்களை இயக்கி வருகிறது.

சுமார் 2 மாத முடக்கத்துக்குப்பின் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. எனினும் குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதைப்போல அடுத்த மாத மத்தியில் இருந்து சர்வதேச விமானங்களையும் குறைவான எண்ணிக்கையில் இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்து ஜூலை 1-ம் தேதியும் மெல்போர்ன் நகரில் இருந்து ஜூலை 14-ம் தேதியும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் புக்கிங் செய்வதற்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


Next Story