நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா சிகிச்சைக்காக டெல்லியில் பிளாஸ்மா வங்கி - கெஜ்ரிவால் தகவல்


நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா சிகிச்சைக்காக டெல்லியில் பிளாஸ்மா வங்கி - கெஜ்ரிவால் தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2020 6:44 PM GMT (Updated: 29 Jun 2020 6:44 PM GMT)

நாட்டிலேயே முதல் முறையாக, டெல்லியில் ஒரு பிளாஸ்மா வங்கியை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர். இதனால் தலைநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெல்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த மாதம் நாம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக தற்போது 13,500 படுக்கைகள் உள்ளன. இதில் 7,500 படுக்கைகள் தற்போதும் காலியாக இருக்கின்றன. இவ்வாறு படுக்கை பிரச்சினை முடிந்துள்ள நிலையில், தற்போது பிளாஸ்மா சிகிச்சைக்காக அதிக அளவில் பிளாஸ்மாவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதால் நிலவி வரும் குழப்பத்தை நான் கவனித்தேன். தங்கள உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளுமாறு ஏராளமான அழைப்புகள் எனக்கு வருகின்றன. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை முறை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்ட 29 நோயாளிகளுக்கு அது நல்ல பலனை தந்திருக்கிறது. கொரோனோ நோயாளிகள் ஆக்சிஜன் அளவு குறைவு மற்றும் சுவாச விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் பெரும் ஆபத்தை அனுபவிப்பார்கள். இந்த பிளாஸ்மா சிகிச்சை அவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரித்து, சுவாச விகிதத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இந்த சிகிச்சை முடிவுகளை மத்திய அரசிடம் வழங்கி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கான அனுமதியை பெற்றுள்ளோம். ஆனால் அனுமதி பெற்றபிறகு ஒவ்வொரு நோயாளிக்கும் பிளாஸ்மா ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக இருக்கிறது.

எனவே நாட்டிலேயே முதல் முறையாக, டெல்லியில் ஒரு பிளாஸ்மா வங்கியை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் கடந்த 3 நாட்களில் முடிந்து விட்டன. இந்த வங்கி ஐ.எல்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் அமைக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த நோயாளியும் இந்த வங்கியில் இருந்து பிளாஸ்மாவை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Next Story