தேசிய செய்திகள்

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை + "||" + China's 'tik tok', 'shareit' apps ban - Central Government Action

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.
புதுடெல்லி,

செல்போன் பயனாளர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இதில் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்ப்அப்’ போன்ற அமெரிக்க செயலிகள் முன்னணி இடம் பெற்றிருக்கின்றன.


இதைப்போலவே சீனா தயாரிப்பு செயலிகளான ‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட ஏராளமான செயலிகளும் சமீப காலங்களில் செல்போன் பயனாளர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வருகின்றன. அதிலும் ‘டிக் டாக்’ செயலி இளசுகளின் உளம் கவர்ந்த செயலிகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

இந்த செயலிகளால் ஒருபுறம் பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’, ‘எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீடியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன.

லடாக் மோதலை தொடர்ந்து ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறி உள்ளார்.
2. சீனாவின் அதிகார நாடகம்: நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5-வது முறை ஒத்திவைக்கப்பட்டது
சீனாவின் அதிகார நாடகத்தால் நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
3. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்
மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என சீன ஊடகம் கூறி உள்ளது.
5. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை
ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.