2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 11:30 PM GMT (Updated: 29 Jun 2020 9:30 PM GMT)

2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5-வது முறையாக கடந்த 1-ந் தேதி மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த ஊரடங்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில் 2-வது கட்டமாக சில தளர்வுகளை அறிவித்தும், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை நீட்டித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அத்தியாவசிய பணிகளை மட்டுமே இங்கு அனுமதிக்க வேண்டும். இந்த பகுதிகளை மாநில அரசுகள் தீர்மானிக்கவேண்டும்.

* ஜூலை 31-ந் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கலையரங்கங்கள், மதுபான விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

* சூழ்நிலையை பொறுத்து இவற்றை திறப்பது பற்றி பின்னர் தனித்தனியாக முடிவு செய்யப்படும்.

* இதேபோல் சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், கலாசார, மத விழாக்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்.

* ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் ரெயில்களின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story