இந்திய பெருங்கடலில் சீனா நடமாட்டம் எதிரொலி: இந்திய கடற்படை கண்காணிப்பு தீவிரம்


இந்திய பெருங்கடலில் சீனா நடமாட்டம் எதிரொலி: இந்திய கடற்படை கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 29 Jun 2020 10:05 PM GMT (Updated: 29 Jun 2020 10:05 PM GMT)

இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் நடமாட்டம் இருப்பதால், அங்கு இந்திய கடற்படை தனது கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

லடாக் பிராந்தியத்தில், இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டன. குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு இந்திய கடற்படை கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதை ஏற்று கடந்த 2 வாரங்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்டறிவதே இதன் நோக்கம் என்று ராணுவ நிபுணர் ஒருவர் கூறினார்.

அமெரிக்க, ஜப்பான் கடற்படைகளுடன் இந்திய கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளது. மேலும், கடந்த 27-ந் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய-ஜப்பான் கடற்படை கப்பல்கள் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தை விஸ்தரிக்க சீனா முயன்று வருவதால், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.

Next Story