பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது மத்திய அரசு - சோனியா காந்தி குற்றச்சாட்டு


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது மத்திய அரசு - சோனியா காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Jun 2020 10:42 PM GMT (Updated: 29 Jun 2020 10:42 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து மத்திய அரசு பணத்தை பறிப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சமூக ஊடகத்தில் பிரசார இயக்கத்தை நேற்று தொடங்கி உள்ளது. இதையொட்டி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாட்டில் கொரோனா பரவலால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மற்றொரு புறம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருக்கிறது. பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 12 காசும் அதிகரித்து உள்ளது.

2014-ம் ஆண்டில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டு இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்படும் பலனை மத்திய அரசு மக்களுக்கு அளிக்காமல் 12 முறை கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. இதன்மூலம் ரூ.18 லட்சம் கோடி கூடுதல் வருவாயை ஈட்டி இருக்கிறது.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு நியாயப்படுத்த முடியாது. இந்த விலை உயர்வால் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறுதொழில் செய்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அரசு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதால் காங்கிரசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். பெட்ரோல், டீசல் மீது கடந்த மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட கலால் வரி உயர்வையும் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் தொடங்கி இருக்கும் இந்த பிரசார இயக்கத்தில் மக்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story