இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2020 4:32 AM GMT (Updated: 30 Jun 2020 4:32 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 418 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் கொரோனாவின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியவில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இப்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான 29 நாட்களில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிதாக 418 பேரின் உயிரையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் பறித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893  ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 822-பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story