நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்; 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் - பிரதமர் மோடி அறிவிப்பு


நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்; 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2020 12:00 AM GMT (Updated: 30 Jun 2020 10:16 PM GMT)

கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

புதுடெல்லி,

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஈவிரக்கமின்றி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பம்பரமாய் சுழன்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கொரோனாவுக்கு எதிரான இந்த பெரும் போரில் நாட்டு மக்களை வழிநடத்துவதற்காக பிரதமர் மோடி அவ்வப்போது தொலைக்காட்சி வழியாக உரையாற்றி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் 4-வது முறையாக நேற்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றினார்.

இதில் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையை இந்தியா கட்டுப்படுத்தி இருக்கிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் எடுக்கப்பட்ட பிற முக்கியமான முடிவுகள் நம் நாட்டின் லட்சக்கணக்கான குடிமக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது.

முதல் கட்ட தளர்வு அறிவித்ததில் இருந்து நம் நாட்டில் தனிப்பட்ட முறையிலும் சமூக அளவிலும் மக்களின் அக்கறையின்மை அதிகரித்து உள்ளதை நாம் பார்த்து வருகிறோம். இது கவலை அளிக்கிறது. முன்பு நாம் முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, ஒரு நாளில் பலமுறை கைகளை கழுவுவது ஆகியவற்றை மிகவும் கவனத்துடன் கடைப்பிடித்தோம். தற்போது இவற்றை மேலும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

முதல் கட்ட தளர்வின் போது கடைப்பிடித்ததை விட தற்போது மேலும் அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள், குடிமக்கள் அதே அளவு தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீது நாம் மேலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.

விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுக்க வேண்டும். இது இந்த நாட்டின் 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை. கிராமத் தலைவரோ அல்லது பிரதம மந்திரியோ, யாரும் இந்தியாவின் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதே நமது முக்கியமான குறிக்கோளாக இருந்தது. மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களால் இயன்ற அனைத்து சிறப்பு நடவடிக்கைகளையும் எடுத்தன. ஊரடங்கு அறிவித்தவுடன் அரசு, ‘பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை’ அறிவித்தது.

மேலும் நாம் மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய விஷயம் உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அது என்னவென்றால், 3 மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ பருப்பு ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

வருகிற நாட்கள் விழாக்களின் காலமாக உள்ளது. ஜூலை 5-ந் தேதி குரு பூர்ணிமாவும் அதைத்தொடர்ந்து ஆவணி மாதமும் துவங்குகிறது. பின்னர் ரக்‌ஷா பந்தன், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் தொடருகின்றன. இவை தவிர கட்டி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. இந்த விழாக்காலம் மக்களின் தேவைகளையும், செலவினங்களையும் அதிகரிக்கின்றது.

எனவே இதை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவு திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும்.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதத்துக்கு 5 கிலோ கடலைப்பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

இந்த, பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டத்தின் நீட்டிப்புக்காக ரூ.90 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை செலவழிக்கப்படும். கடந்த 3 மாதங்களில் செலவழித்த தொகையையும் கூட்டினால் ரூ.1.5 லட்சம் கோடி இந்த திட்டத்துக்காக செலவழிக்கப்படுகிறது.

இன்று நாட்டில் உதவி தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் அரசால் இலவச ரேஷன் வழங்க சாத்தியம் ஆகிறது என்றால் அதற்கான புகழ் 2 வகையானவர்களுக்கு சேர வேண்டும். ஒன்று நம் நாட்டின் கடுமையான உழைப்பாளிகளான விவசாயிகள். மற்றொன்று நம் நாட்டில் நேர்மையாக வரி செலுத்துபவர்கள்.

உங்கள் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் மட்டுமே இந்த நாடு இதனை சாதித்து உள்ளது. இந்த நாட்டின் இருப்பை நீங்கள் நிறைத்து இருக்கிறீர்கள். இதன் மூலம் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் சமையல் அறைகளில் உணவு நிறைந்து உள்ளது. நீங்கள் நேர்மையுடன் வரி செலுத்தினீர்கள், உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றினீர்கள். இதனால் இந்த நாட்டின் ஏழைகள் இத்தனை கடுமையான நெருக்கடியை சமாளித்து வருகிறார்கள்.

இந்த நாட்டின் அனைத்து ஏழை மக்களின் சார்பில் நம் நாட்டின் அனைத்து வரி செலுத்துபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்கு என் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

வரும் நாட்களில் சமூகத்தில் ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நம்முடைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவோம். அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் அதே நேரத்தில் நம்முடைய பொருளாதார நடவடிக்கைகளையையும் விரிவாக்குவோம். தற்சார்பு இந்தியாவுக்காக நாம் ஓய்வின்றி உழைப்போம். உள்நாட்டு தயாரிப்புக்கு குரல் கொடுப்போம். இந்த சபதம் மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து முன்னேற்றம் காண்போம்.

இந்த கோரிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story