அரசியல் பணிகளிலிருந்தோ - அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்தோ தன்னை எதுவும் தடுக்காது- பிரியங்கா காந்தி


அரசியல் பணிகளிலிருந்தோ - அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்தோ தன்னை எதுவும் தடுக்காது- பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 2 July 2020 6:39 AM IST (Updated: 2 July 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

தனது அரசியல் பணிகளிலிருந்தோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்தோ தன்னை எதுவும் தடுக்காது என்று பிரியங்கா காந்தி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு அதிகபட்ச பாதுகாப்பான சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

பிரதமருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமராக இருந்தால், பதவி விலகிய 5 ஆண்டுகள் வரை அவருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த திருத்தம் கூறியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணமடைந்து சுமார் 30 ஆண்டுகள் நெருங்குவதால், அவருடைய குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கடந்த ஆண்டு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. கருப்பு பூனைப்படை பாதுகாப்போ, எந்த அரசு பதவியோ இல்லாதவர்களுக்கு அரசு பங்களா வசதி அளிக்க விதிமுறையில் இடம் இல்லை என்று சுட்டிக்காட்டி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகஸ்டு 1-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி காலி செய்ய தவறினால், விதிகளின்படி, அபராத வாடகை வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது. மத்திய அரசை பிரியங்கா நாள்தோறும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது நிலுவைத் தொகைகள் அனைத்தையும் ஆன் லைன் மூலம் கட்டினார் என தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தனது அரசியல் பணிகளிலிருந்தோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்தோ தன்னை எதுவும்  தடுக்காது என்று பிரியங்கா காந்தி கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும் போது இந்த நடவடிக்கை பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவலையை அடையாளம் காட்டுகிறது. விரக்தியடைந்த அரசாங்கத்தின் இந்த சிறிய முடிவுகளால் நாங்கள் கவலைப்பட மாட்டோம் என கூறினார்.


Next Story