அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் - ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் கருத்து


அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் - ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் கருத்து
x
தினத்தந்தி 2 July 2020 10:35 PM IST (Updated: 2 July 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ செய்தியாளர்களிடம் பேசிய போது, அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்றும் தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் நியாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைப்பை மேம்படுத்த இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் அவசியம் என்று கூறிய அவர், பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசாங்கம் செலவழித்து வருகிறது, ஆனாலும் தனியார் பள்ளிகளை நோக்கியே மக்கள் படையெடுக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார்.

Next Story