உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் சாவு; 2 ரவுடிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்


உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் சாவு; 2 ரவுடிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
x
தினத்தந்தி 4 July 2020 4:45 AM IST (Updated: 4 July 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் நடந்த சண்டையில் 2 ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கான்பூர்,

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவன் விகாஸ் துபே. அங்கு மிகப்பெரிய ரவுடியாக வலம் வரும் இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல், கொலை முயற்சி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

உள்ளூர்வாசி ஒருவரை கொலை செய்ய முயன்றதாக சமீபத்தில் சவுபேபூர் போலீஸ் நிலையத்தில் விகாஸ் துபே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீஸ்காரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு அவனது வீட்டுக்கு சென்றனர்.

விகாஸ் துபே பயங்கர ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பெரும் படையே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கான்பூருக்கு அருகே உள்ள பிக்ரு கிராமத்துக்குள் நுழைந்தது. ஆனால் போலீசார் தன்னை பிடிக்க வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேவுக்கு கிடைத்திருக்கிறது.

எனவே தனது கூட்டாளிகளோடு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தான். மேலும் அவர்கள், போலீசார் தங்கள் பதுங்கிடத்தை அடையாதவாறு சாலைகளில் தடுப்புகளை வைத்து தடைகளையும் ஏற்படுத்தி இருந்தனர்.

ஆனாலும் இந்த தடைகளை அகற்றிவிட்டு போலீசார் அவனது வீட்டை நோக்கி வேகமாக முன்னேறினர். வீட்டை நெருங்கியபோது ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து சரமாரியாக துப்பாக்கி தோட்டாக்கள் போலீசார் மீது பாய்ந்தன. அங்கு என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் போலீசார் மீது துப்பாக்கி தோட்டாக்களை மழையாக பொழிந்தனர்.

இதில் குண்டுபாய்ந்து போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 போலீஸ்காரர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியாகினர். மேலும் 6 போலீஸ்காரர்கள் மற்றும் உள்ளூர்வாசி ஒருவர் என 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

எனினும் மீதமுள்ள போலீசார் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட போலீசாரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி விட்டனர்.

கான்பூரில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் உத்தரபிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் காயமடைந்த போலீசாரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையினர் முடுக்கி விடப்பட்டனர். இதன் பயனாக நிவடா கிராமத்தில் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் இருவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் அந்த இரு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாரிடம் கொள்ளையடித்த கைத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

ஒரே நாள் இரவில், தேடப்படும் பயங்கர குற்றவாளியாக மாறி இருக்கும் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கான்பூர் முழுவதும் சீல் வைத்து போலீசார் தேடுதல் வேட்டைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியான போலீசாரின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் டி.ஜி.பி.க்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

ரவுடி கும்பலுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 8 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story