லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு


லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
x
தினத்தந்தி 4 July 2020 6:54 AM IST (Updated: 4 July 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15 ந்தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது.  இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரத்தை தொடர்ந்து   லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இதையடுத்து பதட்டத்தை  தணிக்கும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.  தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.  எனினும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் நீடிப்பதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிா்ப்பதாக ஜப்பான் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ வா்தன் ஷ்ரிங்கலா மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதா் சட்டோஷி சுஸுகி இடையேயான சந்திப்பு டெல்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக் பகுதியின் இப்போதைய நிலைமை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பான் தூதருக்கு ஹா்ஷ வா்தன் ஷ்ரிங்கலா எடுத்துரைத்தாா்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னா் தனது  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜப்பான் தூதர் கூறுகையில், “ கிழக்கு லடாக் எல்லை பகுதி நிலவரம் குறித்தும், அந்தப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வு காணும் இந்தியாவின் கொள்கைகள்   குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை செயலா் எடுத்துரைத்தாா்.

எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் அமைதியான முறையில் தீா்வு காணப்படும் என்று ஜப்பானும் நம்புகிறது. எல்லையில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை ஜப்பான்  கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.

Next Story