எல்லையில் அத்துமீற முயற்சிக்கும் சீன ராணுவம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு


எல்லையில் அத்துமீற முயற்சிக்கும் சீன ராணுவம்:  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 6 July 2020 5:45 AM IST (Updated: 6 July 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நேற்று திடீரென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது லடாக் எல்லை நிலவரம், கொரோனா பாதிப்பு பற்றி அவரிடம் விளக்கி கூறினார்.

புதுடெல்லி,

சீனாவுடன் இந்தியா நட்பு பாராட்ட முயன்றாலும், அந்த நாடு தொடர்ந்து இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

எல்லையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வரும் சீனா, சர்வதேச அரங்கிலும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறது. ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா வலுவான சக்தியாக விளங்குவதை சீனா விரும்பவில்லை.

கடந்த 2 மாதங்களாகவே லடாக் எல்லையில், அத்துமீறும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்தனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளின் மட்டத்திலும், தூதரக அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும் எல்லை அருகே சீனா படைகளை குவித்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு தனது படை பலத்தை அதிகரித்து வருகிறது.

ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்துவிட்டு வந்தார்.

அவரை தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை லடாக் சென்றார். சீன எல்லையை யொட்டி அமைந்துள்ள நிமு ராணுவ முகாமுக்கு சென்ற அவர் அங்குள்ள களநிலவரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில் சீனாவுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்றும், எதையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பின்னர், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் காயம் அடைந்து லேயில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை பார்த்து ஆறுதல் கூறி உடல் நலம் விசாரித்தார். அதன்பிறகு டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று திடீரென்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

அப்போது லடாக் எல்லையில் நடந்த மோதல், தற்போது அங்குள்ள பாதுகாப்பு நிலவரம், அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போன்ற விவரங்களை ஜனாதிபதியிடம் அவர் விளக்கி கூறினார்.

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதுபற்றிய விவரங்களையும் ஜனாதிபதியிடம் மோடி தெரிவித்தார்.

பின்னர் இந்த சந்திப்பு பற்றி ஜனாதிபதி மாளிகையின் சார்பில் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

Next Story