சுற்றுலா விடுதியில் ஊரடங்கை மீறி நடிகைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்


சுற்றுலா விடுதியில் ஊரடங்கை மீறி நடிகைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
x
தினத்தந்தி 6 July 2020 5:34 AM IST (Updated: 6 July 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் சுற்றுலா விடுதியில், ஊரடங்கை மீறி நடிகைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது.

கோழிக்கோடு,

சுற்றுலா விடுதியில், ஊரடங்கை மீறி நடிகைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அரசு அறிவித்துள்ளது. மேலும் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்கள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது. மது விருந்துகள் நடத்தக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள உடும்பன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர சுற்றுலா விடுதியில் ஊரடங்கை மீறி மது விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான சினிமா நடிகர்- நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடந்துள்ளது. இதில் பங்கேற்றவர்கள் மது அருந்தி கொண்டாடுவதும், பெல்லி டான்ஸ், காபரே நடனம் என நடன அழகிகளின் உற்சாக ஆட்டம் நடந்துள்ளது. இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரோ இவற்றை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர் அது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி அறிந்த இடுக்கி மாவட்ட கலெக்டர் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிகழ்ச்சி நடந்த விடுதியின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story