கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொருட்களை சுமந்து செல்ல ரோபோ டிராலி அறிமுகம்
மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை சுமந்து செல்லும் ரோபோ டிராலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்களை காத்து கொள்ள கவச உடைகளை அணிய வேண்டி உள்ளது. தொடர்ந்து நாள் முழுவதும் அதனை கழற்றாமல் பணிபுரியும் சூழல் உள்ளது. இதனால் சொல்ல முடியாத சங்கடங்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இது தவிர்த்து நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்நிலையில், இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் இன்று இந்த ரோபோ டிராலி செயல்பாட்டுக்கு வந்தது.
அங்கிருக்கும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வினியோகிக்கும் பணியில் அது ஈடுபடுத்தப்பட்டது. கழிவு பொருட்களை சேகரிக்கவும் இதனை பயன்படுத்த முடியும்.
இதனால், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களிடம் இருந்து செவிலியர்கள் உள்ளிட்டோர் விலகி இருக்க முடியும். அவர்களுக்கு ஏற்படும் வைரஸ் பரவல் ஆபத்தும் குறையும். உணவு மற்றும் மருந்துகளை வழங்க, கொரோனா வார்டுகளில் அதற்கான கவச உடைகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான தேவையும் குறையும். வரப்பிரசாதம் போல் அமைந்துள்ள இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story