திருவனந்தபுரத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது சாலைகள் வெறிச்சோடின


திருவனந்தபுரத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 7 July 2020 5:55 AM IST (Updated: 7 July 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் ஒரு வார முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் முதல்-மந்திரி இல்லத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் 6-ந்தேதி (அதாவது நேற்று) முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம், அரசு அலுவலகங்கள், கோர்ட்டுகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும் மாநகராட்சியில் அடங்கிய 100 வார்டுகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அதே சமயம் ஆஸ்பத்திரிகள், வங்கிகள், ஏ.டி.எம். மையம், பால் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், கியாஸ் ஏஜென்சிகள் ஆகியவை செயல்பட்டன.

திருவனந்தபுரத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. மேலும் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள் சீல் வைக்கப்பட்டன. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோவளம்- கழக்கூட்டம் சாலை உள்பட மாநகராட்சி முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத் கூறும்போது, “திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அவசியமில்லாமல் வாகனத்தில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது“ என்றார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து உள்ளனர். 2 ஆயிரத்த 228 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவனந்தபுரம் கலெக்டர் நவ்ஜோத் கோஷா கூறியதாவது:-

திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களால் தான் அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதிக்கு செல்ல அனுமதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே வெளியே செல்ல பொது மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

மக்களின் நலன் கருதியே இந்த ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். முககவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது.

மக்களின் சிரமத்தை போக்க காலை 7 மணி முதல் 11 மணி வரை மளிகை கடை மற்றும் காய்கறிகடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி சார்பில் குடும்பஸ்ரீ அமைப்புகள் மூலமாக உணவு பொட்டலங்கள் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘சமூக பரவல் மூலம் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையான மக்களை தாக்கி வருவதால், மாவட்டத்தில் கூடுதல் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்து உள்ளோம்‘ என்றார்.

Next Story