பிரதமர் சர்மா ஒலி அரசை காப்பாற்ற நேபாள உள் அரசியல், விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா
பிரதமர் சர்மா ஒலி அரசை காப்பாற்ற சீனாவின் தூதர் நேபாள உள் அரசியல், விவகாரங்களில் தலையிட்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி கூறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். அவர் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டபோது, பிரச்சினை மேலும் தீவிரமானது.
சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இக்கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் அது கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. 68 வயதான ஒலியின் அரசியல் எதிர்காலம் இப்போது நிலைக் குழு கூட்டத்தின் போது முடிவு செய்யப்படும். நிலைக்குழுவின் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் சீனா தனது தூதரகம் மூலம் நேபாளத்தின் உள் அரசியலில் தலையிடுகிறது பிரதமர் கே.பி. ஓலியின் அரசை காப்பாற்ற வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட அதிருப்தி அடைந்த நேபாள தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளதாகவும், ஓலி அரசாங்கத்தை மத்தியஸ்தம் செய்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளதாகவும் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான அறிவுறுத்தலின் பேரில், நேபாளத்திற்கான சீனத் தூதர் நேபாளத்தின் உள் அரசியலில் தனது செல்வாக்கை செலுத்த முயற்சிக்கிறார்.
ஹூ யான்கி நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்சிபி) தலைவர் மாதவ் குமாருடன் ஞாயிற்றுக்கிழமை கோடேஷ்வரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு சந்திப்பை நடத்தி உள்ளார்.
பிரதமர் கே.பி. சர்மா ஓலி பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருவதால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாதவ் குமார் சீன தூதர் சந்திப்புக்கு பின்னர் ஜனாதிபதி பித்யா பண்டாரியையும் சந்தித்தார்.
நெருக்கடியான நேரத்தில் நேபாளத்தின் உள் விவகாரங்களில் சீன தூதர் தலையிடுவது இது முதல் முறை அல்ல. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, நேபாள கம்யூனிஸ்ட் உள்-கட்சி சண்டை உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஹூ ஜனாதிபதி பண்டாரி, பிரதமர் ஓலி மற்றும் மூத்த தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story