கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இன்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதத்தில் தேசிய சராசரியை விட, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தோர் விகிதம் அதிகளவில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்து இருந்தது. இவற்றில் சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஷ்கார் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இது 1 லட்சத்து 80 ஆயிரத்து 390 அதிகம் ஆகும். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 61.13% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்ததில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story