நகராட்சி, மாநகராட்சிக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டில், தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு


நகராட்சி, மாநகராட்சிக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டில், தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு
x
தினத்தந்தி 8 July 2020 3:45 AM IST (Updated: 8 July 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையையும், வாக்கு எண்ணும் மையங்களின் வளாகம் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான வீடியோ நகலை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு கடந்த ஜனவரி 10-ந் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையிலான காணொலி அமர்வில் தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி இந்த வழக்கில் தி.மு.க.வையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

Next Story