இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 July 2020 12:00 AM GMT (Updated: 7 July 2020 11:26 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு, 10 லட்சம் பேரில் 505 பேருக்குத்தான் தொற்று உள்ளது என்று மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் திட்டவட்டமாக கூறி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று 7.19 லட்சத்தை கடந்து உள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இதில் உண்மை இல்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான் என்கிறது மத்திய அரசின் சுகாதார அமைச்சகம்.

உலகளவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக 1453 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 505 ஆகத்தான் உள்ளது.

இதையொட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன்படி, லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் 10 லட்சம் பேருக்கு 15 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை பெருவில் 9,070, அமெரிக்காவில் 8,560, பிரேசிலில் 7,419, ஸ்பெயினில் 5,358 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டு வரும் இறப்புகளும் இந்தியாவில் குறைவுதான். இந்தியாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், இது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பலி 10 லட்சம் பேருக்கு 14 ஆகத்தான் இருக்கிறது. ஆனால் உலக அளவிலான சராசரி என்பது இதை விட 4 மடங்குக்கும் அதிகம். அது 68 ஆக உள்ளது.

இங்கிலாந்தில் 10 லட்சம் பேருக்கு இறப்புவீதம் 651, ஸ்பெயினில் 607, இத்தாலியில் 576, பிரான்சில் 456, அமெரிக்காவில் 391 ஆக இருக்கிறது.

இந்தியாவில் முன்கூட்டியே தொற்றை கண்டுபிடித்து, சரியான நேரத்தில் பயனுள்ள மருத்துவ சிகிச்சை அளித்து வருவதால் தினமும் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15 ஆயிரத்து 515 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 ஆக உள்ளது. இது 61.13 சதவீதம் ஆகும்.

தற்போது நாடு முழுவதும் தொடர் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 ஆகும்.

Next Story