நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை; கொரோனாவில் இருந்து தப்பிய 106 வயது முதியவர் பேட்டி


நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை; கொரோனாவில் இருந்து தப்பிய 106 வயது முதியவர் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2020 2:11 PM GMT (Updated: 8 July 2020 2:11 PM GMT)

நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை என்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 106 வயது முதியவர் பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.  கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் 4 கோடி பேர் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பலியாகினர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்து உள்ளது.  உலக பாதிப்பு எண்ணிக்கையில் 5ல் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் பலியாகி இருந்தனர் என நம்பப்படுகிறது.  எனினும், இந்தியாவில் இறப்பு விகிதம் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

இதேபோன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சமீபகால வரலாற்றில், எச்1என்1 வைரசால் ஏற்படும் ஸ்பானிஷ் ப்ளூ கடுமையான நோய் தொற்றாக அறியப்படுகிறது என தெரிவித்து உள்ளது.  கடந்த 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு உலகில் 3ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு நாட்டின் தலைநகர் டெல்லியிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  டெல்லியில் வசித்து வரும் முக்தார் அகமது என்ற 106 வயது முதியவருக்கும், அவரது 70 வயது மகனுக்கும் சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து, கொரோனா மையத்தில் அளித்து வந்த சிகிச்சையில் அவர்கள் இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதன்பின், பாதிப்பிலிருந்து முதியவர் முழு அளவில் விடுபட்டார்.  அவரது மகன், மனைவி மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என 4 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.  தனது மகனை விட முதியவர் வெகுவிரைவில் குணமடைந்தது அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.

கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூ நோய் பாதிப்பு ஏற்படும்பொழுது, முதியவருக்கு 4 வயது ஆகியிருந்தது.  கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்.  அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்பொழுது, நான் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை.  ஆனால், முறையான சிகிச்சை கிடைத்ததில் நான் குணமடைந்துள்ளேன்.  என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நோய்த்தொற்றை ஒருபோதும் கண்டதேயில்லை என்று கூறியுள்ளார்.

Next Story