9 முதல் 12-ம் வகுப்புவரையிலான சி.பி.எஸ்.இ. புதிய பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பாடங்கள்
சி.பி.எஸ்.இ. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் குடியுரிமை, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கடந்த மார்ச் 16-ந் தேதியில் இருந்து மூடப்பட்ட நிலையில் உள்ளன.
பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், ஜனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், மதம், சாதி, பிரபலமான போராட்டங்கள், ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகியவை தொடர்பான பாடங் கள் நீக்கப்பட்டுள்ளன.
11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகங்களின் வளர்ச்சி ஆகிய தலைப்பிலான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறும் இயல்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள், பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட தலைப்பிலான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீக்கப்பட்ட பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு முடிந்த அளவுக்கு விளக்கிக் கூறுமாறு பள்ளி நிர்வாகங்களையும், ஆசிரியர்களையும் சி.பி.எஸ்.இ. கேட்டுக்கொள்கிறது. இந்த நீக்கப்பட்ட பாடங் கள், அக மதிப்பீட்டிலோ, ஆண்டு இறுதி பொதுத்தேர்விலோ இடம்பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story