லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்? காங்கிரஸ் கேள்வி


லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 9 July 2020 1:56 AM GMT (Updated: 9 July 2020 1:56 AM GMT)

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, லடாக் எல்லையில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

சீனாவுடன் ஏற்பட்டுள்ள புதிய உடன்பாட்டின்படி கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் இந்திய ராணுவம் ரோந்து செல்லக்கூடாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஏற்கனவே இருந்து வந்த நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய நிலப்பகுதிக்குள் நமது ராணுவம் ரோந்து செல்லக்கூடாத இடம் என்று ஒரு பகுதியை வரையறுக்க சம்மதித்தது ஏன்? இதுபற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும்.

பங்கோங் சோ ஏரி பகுதியில் உள்ள பிங்கர் 4, பிங்கர் 8, தெஸ்பாங் சமவெளியில் உள்ள ஒய் சந்திப்பு பகுதிகளில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெறப்படாதது ஏன்? அந்த பகுதிகளில் 2013-ம் ஆண்டில் இருந்த நிலை திரும்பாதது ஏன்?

ஒட்டுமொத்த தேசமும் இந்திய ராணுவத்துக்கும், அரசுக்கும் ஆதரவாக உள்ளது. எனவே நாட்டையும், தேசத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story