மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரும் மனு மீது 13-ந் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரும் மனு மீதான விசாரணையை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக செய்யாறைச் சேர்ந்த டி.ஜி.பாபு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ படிப்புக்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில், மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றாததாலும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சரியாக பின்பற்றாததாலும் எனக்கு இடம் கிடைக்காமல் போனது. எனவே ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே நிலுவையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரும் மற்றொரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு வேறு வழக்கு என்பதால் சென்னை ஐகோர்ட்டில் விசாரணையை ஒத்திவைத்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் என்றும் கூடுதலாக இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வரும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு மருத்துவ படிப்பு மற்றும் பல்மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கீட்டில் இருந்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக மாணவர்களுக்கு வழங்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு மனுக்களும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டி.ஜி.பாபு தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, 50 சதவீத இடஒதுக்கீடு கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரி சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கும் எந்த வகையில் வேறுபட்டவை என்பது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கினார்.
இதைதொடர்ந்து நீதிபதிகள், சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கின் ஆவணங்களை படித்துப் பார்த்து விட்டு டி.ஜி.பாபு மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களை வருகிற 13-ந் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story