கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு


கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 10 July 2020 5:54 PM IST (Updated: 10 July 2020 5:54 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரையும், அவரது நண்பரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில், ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார். ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள அந்த மனுவில் அவர், தனக்கும், தங்கம் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனவும், தனக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று  கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) எடுக்கப்போவதால், உயர் நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்றும் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றே விசாரிக்க முடியும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) நகலை, குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞருக்கு வழங்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story