இரு தரப்பினரும் "போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு
இரு தரப்பினரும் "போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக" இருக்க வேண்டும் என 18 நிமிட யூடியூப் வீடியோவில் சீனத் தூதர் சன் வீடோங் கூறி உள்ளார்.
புதுடெல்லி
கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், எல்லை முழுவதும் போர் மேகமும் சூழ்ந்தது.
இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருநாட்டு எல்லை பேச்சுவார்த்தையின் சிறப்பு பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.
இதில் எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமுக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த 6-ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேறின.
இந்த நிலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதலை விட அமைதி தேவை, பேச்சுவார்த்தைகளின் மூலம் சிக்கலான பிரச்சினைக்கு ஒரு "நியாயமான தீர்வை" கண்டுபிடிக்கும் வரை சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியையும் பேணுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீனத் தூதர் சன் வீடோங் கூறி உள்ளார்.
சீன தூதரகத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட கிட்டத்தட்ட 18 நிமிட வீடியோவில் சீனத் தூதர் சன் வீடோங் கூறியதாவது
இரு தரப்பினரும் "போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக" இருக்க வேண்டும். இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை "துண்டிக்க" வேண்டும். "சீனாவில் தயாரிக்கப்பட்ட" பொருட்களை விலக்க வேண்டும். என்ற சில தடைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சீன நிறுவனங்கள் மற்றும் இந்திய நுகர்வோருக்கு நியாயமற்றதாக இருக்கும்.
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் சமமாக கருதுவதன் மூலம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
இரு தரப்பினரும் "பரஸ்பர முக்கிய நலன்களையும் முக்கிய அக்கறைகளையும் மதிக்க வேண்டும், மற்றும் ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story