கொரோனா தடுப்பு மருந்து வரும் 2021ம் ஆண்டு வரை சாத்தியமில்லை; அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு


கொரோனா தடுப்பு மருந்து வரும் 2021ம் ஆண்டு வரை சாத்தியமில்லை; அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 6:41 PM IST (Updated: 10 July 2020 6:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து வரும் 2021ம் ஆண்டு வரை சாத்தியமில்லை என நாடாளுமன்ற நிலை குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய, ஆசிய நாடுகளும் முழு அளவில் ஈடுபட்டு உள்ளன.  இந்த முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஆனது, வரும் ஆகஸ்டு 15ந்தேதிக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.  இதற்கு நிபுணர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்.  இதுபோன்ற அறிவிப்புகள் பிரதமர் மோடி அரசுக்கு அரசியல் லாபம் ஏற்படுத்த உதவும் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறின.

இந்த நிலையில், புதுடெல்லியில் நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று நடந்தது.  இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலை குழுவை, அரசு ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தில், உயிர்தொழில்நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு துறை, அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே. விஜய ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், உலகின் 60 சதவீத தடுப்பு மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.  அதனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அல்லது தயாரிப்பல் இந்தியா முன்னணியில் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

இதன் முடிவில், இந்தியாவில் தயாரான தடுப்பு மருந்துகளை மனிதர்களில் சோதனை செய்யும் முதல் முயற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  உலகில், தடுப்பு மருந்துகளை மனிதர்களில் சோதனை செய்யும் முயற்சிக்கான 140 பேரில் 11 பேரிடம் தடுப்பு மருந்து சோதனை முயற்சி தொடங்கப்பட்டு விட்டது.

எனினும், கொரோனா வைரசுக்கான இந்த தடுப்பு மருந்துகளை வரும் 2021ம் ஆண்டுக்கு முன்வரை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு சாத்தியமில்லை என நாடாளுமன்ற நிலை குழுவிடம் தங்களது அறிக்கையில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story