ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று முன்தினம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றைய பாதிப்பு அந்த எண்ணிக்கையை முறியடித்துள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5 லட்சத்தை தொட இருக்கிறது.
இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக உயர்ந்து இருக்கும் நிலையில், இதில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 513 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இன்னும் 2 லட்சத்து 76 ஆயிரத்து 685 பேர் இந்த நோய்க்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வைரஸ் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 475 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்த நோயால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் இருக்கிறது. அங்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 9,667 ஆக இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அந்த வைரசின் பிடியில் சிக்கி 1,829 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் அடைப்புக்குறிக்குள் காணலாம்.
டெல்லி- பாதிப்பு 1,07,051 (பலி 3,528), குஜராத் 39,194 (2,008), உத்தரபிரதேசம் 32,362 (862), கர்நாடகா 31,105 (486), தெலுங்கானா 30,946 (331), மேற்குவங்காளம் 25,911 (854), ஆந்திரா 23,814 (277), ராஜஸ்தான் 22,563 (491), அரியானா 19,369 (287), மத்தியபிரதேசம் 16,341 (634), அசாம் 14,032 (22), பீகார் 13,944 (115), ஒடிசா 11,201 (52), ஜம்மு காஷ்மீர் 9,501 (154), பஞ்சாப் 7,140 (183), கேரளா 6,534 (27), சத்தீஸ்கார் 3,675 (15), உத்தர காண்ட் 3,305 (46), ஜார்கண்ட் 3,246 (23), கோவா 2,151 (9), திரிபுரா 1,776 (1), மணிப்பூர் 1,450, புதுச்சேரி 1,151 (14), இமாசலபிரதேசம் 1,140 (11), லடாக் 1,055 (1), நாகாலாந்து 673, சண்டிகார் 523 (7), தாதர்நகர் ஹவேலி 411, அருணாசலபிரதேசம் 302 (2), மிசோரம் 197, அந்தமான் நிகோபார் தீவு 151, சிக்கிம் 134, மேகாலயா 113 (2).
மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.
Related Tags :
Next Story