ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரேவா,
மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் 1,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரியஒளி மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தலா 500 ஹெக்டேர் பரப்பளவில் தலா 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டம் ஆகும்.
பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த மின்உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
அன்னை நர்மதா மற்றும் வெள்ளைப்புலியின் அடையாளத்தை கொண்டு வரலாற்றில் அறியப்படும் ரேவா நகரம், இப்போது தொடங்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரியஒளி மின்உற்பத்தி திட்டத்தின் மூலமும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
இதேபோல் ஷாஜாபூர், நீமுச், சட்டார்பூர் நகரங்களிலும் சூரியஒளி மின்உற்பத்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களெல்லாம் நிறைவடையும் போது மாசற்ற, மலிவான மின்உற்பத்தியின் மையமாக மத்தியபிரதேச மாநிலம் விளங்கும்.
சூரியஒளி மின்உற்பத்தி மாசற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும். இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் மாசற்ற அதேசமயம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முக்கிய மையமாக மாற இருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மத்தியபிரதேச மாநிலத்துக்கு மட்டுமின்றி டெல்லி மெட்ரோ ரெயில் சேவைக்கும் பயன்படுத்தப்படும்.
நாட்டில் வளர்ச்சி அதிகரித்து வருவதால், மின்சார தேவையும் அதிகரித்து உள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவது ஒரு அம்சம் ஆகும். மின்உற்பத்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பதை தவிர்க்கும் வகையில் சூரியஒளி மின்தகடு, பேட்டரிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை நாமே உள்நாட்டில் தயாரிக்க வேண்டும்.
21-ம் நூற்றாண்டில் மின்சார உற்பத்தியில் சூரியஒளி மின்சக்தி முக்கிய பங்கு வகிக்கும். உலகம் முழுவதுமே சூரியஒளி உறுதியாக உள்ளது. சூரியஒளி மின்உற்பத்தியால் சுற்றுச்சூழலும் மாசுபடுவது இல்லை. எனவே மின்சார தேவையை பூர்த்தி செய்ய தற்சார்புடன் செயல்பட முடியும்.
கொரோனா பரவலை தடுக்கவும், நோய்த் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவவேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நிகழ்ச்சியில் மத்தியபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மத்திய மந்திரிகள் ஆர்.கே.சிங், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story