விகாஸ் துபே செய்தது தவறு, இந்த மரணத்திற்கு தகுதியானவரே: மனைவி ரிச்சா துபே கருத்து


விகாஸ் துபே செய்தது தவறு, இந்த மரணத்திற்கு தகுதியானவரே:  மனைவி ரிச்சா துபே கருத்து
x
தினத்தந்தி 11 July 2020 8:40 AM IST (Updated: 11 July 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

விகாஸ் துபே செய்தது தவறு, இத்தகைய நிலைக்கு அவர் தகுதியானவர்தான் என்று மனைவி ரிச்சா துபே தெரிவித்தார்.

கான்பூர்,

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் நேற்று காலை கொல்லப்பட்டார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், விகாஸ் துபேயின் குடும்பத்தினர் என்கவுண்டருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விகாஸ் துபேவை  போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது மிகச்சரியான செயல் என்று அவரது  தந்தை கூறிய நிலையில், தற்போது, விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபேவும், போலீசார் நடவடிக்கை சரியானதே என்று கூறியுள்ளார்.  இது குறித்து ரிச்சா துபே கூறுகையில், “விகாஸ் துபே செய்தது மிகவும் தவறானது. இந்த மரணத்தை பெறுவதற்கு அவர் தகுதியானவரே” என்று கூறினார்.

விகாஸ் துபேவின் இறுதிச்சடங்கிலும் மனைவி ரிச்சா துபே கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த ஊடகத்தினரை பார்த்து ஆவேசமாக இங்கிருந்து செல்லுங்கள் எனவும் இந்த என்கவுண்டருக்கு நீங்கள் (ஊடகங்களே) தான் காரணம் எனவும் கூறினார். விகாஸ் துபேயின் உடல் நேற்று அவரது சொந்த கிராமத்தில் உள்ள  மின் மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனத்தின் போது பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story