கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் விலகல்


கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் விலகல்
x
தினத்தந்தி 11 July 2020 8:24 PM GMT (Updated: 11 July 2020 8:24 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் வெளியேறி வருகின்றன.

புதுடெல்லி, 

லடாக் கிழக்கு எல்லையில் உள்ள பங்கோங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன படைகள் ஊடுருவியதால், மே 5-ந்தேதி இரவு பங்கோங் சோ பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் கணிசமான வீரர்கள் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக எல்லை முழுவதும் பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்பும் மீண்டும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதிக்கொண்டனர். இந்த பயங்கர மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர்.

இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. அதேநேரம் பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த மாதம் 30-ந்தேதி இருநாட்டு கமாண்டர் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் கடந்த 5-ந்தேதி இருநாட்டு எல்லை விவகார பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சீனாவின் வெளியுறவு மந்திரி ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் லடாக் எல்லையில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன.

கடந்த 6-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த நடவடிக்கைகளால் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங், கோக்ரா போன்ற பகுதிகளில் இருந்து சீன படைகள் வெளியேறி விட்டன. மேலும் அங்கு அமைத்த கூடாரம் உள்ளிட்ட கட்டுமானங்களையும் அகற்றினர்.

இதைப்போல இந்த பதற்றத்துக்கு வழி வகுத்த முதல் மோதல் நடந்த பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியது.

இந்த நிலையில் பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் வெளியேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் பங்கோங் ஏரியில் ரோந்து பணிகளுக்காக சீனா நிறுத்தி இருந்த சில படகுகளையும் அவர்கள் எடுத்து சென்று விட்டதாக மேலும் தெரிவித்தன.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த இந்திய சீன தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை முற்றிலும் வாபஸ் பெறுவது என இரு தரப்பும் உறுதியளித்திருந்தன. எல்லையில் இருந்து படை விலக்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருநாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story