விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு: அமலாக்கத்துறை திட்டம்
உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.
உத்தரபிரசேதத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே (வயது 56), கடந்த 2-ந்தேதி இரவு தன்னை கைது செய்ய வந்த போலீசார் மீது கூட்டாளிகளுடன் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 7 பேர் பலத்த காயமும் அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்குப்பின் உத்தரபிரதேசத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்த விகாஸ் துபே கடந்த 9-ந்தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாளி கோவிலில் சிக்கினான். அவனை கைது செய்த மத்திய பிரதேச போலீசார், பின்னர் அன்று மாலையில் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் கான்பூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். கான்பூரின் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் வந்தபோது திடீரென விகாஸ் துபே இருந்த கார் கவிழ்ந்து, சில போலீசார் காயமடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றான்.
போலீஸ்காரர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு சுட்டபடியே தப்பி ஓடிய அவனை போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர். இது உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
கான்பூர் மட்டுமின்றி உத்தரபிரதேசம் முழுவதும் அறியப்படும் ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபே, ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும் வந்திருக்கிறான். இந்த பணத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் பெயரில் அசையும், அசையா சொத்துகளாக வாங்கி குவித்து உள்ளான். சமீபத்தில் கூட லக்னோவின் ஆர்யாநகரில் ரூ.23 கோடிக்கு ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியுள்ளான்.
அந்தவகையில் இவனுக்கு சொந்தமாக 11 வீடுகள் மற்றும் அவனது கூட்டாளிகள் பெயரில் பினாமி சொத்தாக 16 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் என ஏராளமான சொத்துகளை வைத்துள்ளான். மேலும் உத்தரபிரதேசத்துக்கு வெளியேயும், வெளிநாடுகளிலும் கூட அவனுக்கும், கூட்டாளிகளுக்கும் சொத்துகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விகாஸ் துபே, குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக கடந்த 6-ந்தேதி கான்பூர் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், விகாஸ் துபேயின் அசையும், அசையா சொத்துகள் பற்றிய விவரம் மற்றும் அவனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள், அவற்றின் தற்போதைய நிலை போன்றவை குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த விசாரணை தீவிரமடைந்து வந்த நிலையில், ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளான். எனினும் அவனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீதான விசாரணையை தொடர அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது விரைவில் வழக்கு தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.
இதற்கிடையே, பயங்கர ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபேயின் கிரிமினல் டைரி பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் 61 வழக்குகளை தன் பெயரில் கொண்டு கொடூர தாதாவாக விகாஸ் துபே உருவாகி இருந்தது தெரியவந்து உள்ளது.
இதில் 8 போலீசார் உள்பட குறைந்தபட்சம் 15 பேரை கொன்றது தொடர்பாக 8 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் 6 வழக்குகள், ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தில் 3 என பல்வேறு பிரிவுகளில் விகாஸ் துபே மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 1990 முதல் சுமார் 30 ஆண்டு ரவுடி வாழ்க்கையில் முதல் 15 ஆண்டுகளிலேயே 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. விகாஸ் துபே மீது ஷிவ்லி போலீஸ் நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்தபோது அவனுக்கு வயது சுமார் 30 தான்.
கான்பூரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் விகாஸ் துபே மீது வழக்குகள் இருக்க, அவன் மீதான முதல் வழக்கு 1990-ம் ஆண்டு சவுபேபூர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியது. கடைசி வழக்கும், 8 போலீசாரை கொன்ற சம்பவத்தில் அதே போலீஸ் நிலையத்தில்தான் பதியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story