கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவி: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-1-ந் தேதி மும்பை அதிர்ந்தது. அதற்கு காரணம் வழக்கமான பயங்கரவாதிகளின் தாக்குதல் அல்ல. கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல்.
அதுவும் தாராவியில் முதன்முதலாக அன்று பாலிகாநகரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானபோது, ஒட்டுமொத்த மும்பையும் கதிகலங்கியது. காரணம், 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 6½ லட்சம் மக்களுக்கும் அதிகமாக வாழ்கிற பகுதி அது. அதுவும் சின்னச்சின்ன அறைகளில் 10 பேர் வாழ்கிற அளவுக்கு மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி... குறுகலான சந்துக்கள்... அங்கு தனி மனித இடைவெளியை பராமரிப்பது என்பதெல்லாம் பகல் கனவு... அப்படி இருக்கையில் தாராவியில் ஒருவருக்கு கொரோனா என்றால் அங்கு வாழ்கிற அத்தனை பேருக்கும் பரவி விடும் ஆபத்து அருகாமையில் இருந்தது.
ஆனால் 3 மாதங்களில், ஜூன் 9-ந் தேதி நிலவரப்படி அங்கு மொத்தம் 2,347 பேருக்குத்தான் பாதிப்பு. அவர்களில் 1,815 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருந்தார்கள். 291 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 80-க்கும் சற்று அதிகமானோர் மட்டுமே கொரோனாவுக்கு இரையாகி இருந்தனர்.
மராட்டிய அரசு, மும்பை மாநகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தாராவி மக்கள் என கூட்டு முயற்சியாக செயல்பட்டு தாராவியில் கொரோனாவை கட்டுக்குள் வைத்தனர். காய்ச்சல் முகாம்கள் நடத்தி மக்களை வரவைத்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, நோயாளிகளை விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சை பெற வைத்து, அவர்களின் தொடர்பு தடம் அறிந்து தனிமைப்படுத்தி கண்காணித்தனர். சாப்பாட்டுக்கு கூட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தேவையின்றி வீடு தேடி சாப்பாடு போனது.
அடித்தட்டு மக்களான தாராவி மக்கள், கொரோனா வைரசுக்கு பயந்தார்கள். அதனால் விழிப்புணர்வு பெற்றார்கள். கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிவதில் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு கொடுத்தார் கள். அதனால்தான் தாராவி, கொரோனா என்ற கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்காமல் தப்பியது.
தாராவியை கொரோனாவின் பிடியில் இருந்து கட்டுப்படுத்தி இருப்பது மும்பை மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் கொரோனாவை கட்டுக்குள் வைத்த தாராவியை, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
இது பற்றி மேலும் அவர் கூறியது இதுதான்-
கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக வெடித்தது. ஆனாலும் அதையும் கட்டுப்படுத்த முடியும் என்று உலகளவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளன.
அவற்றில் சிலவற்றை சொல்ல வேண்டுமானால், இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா ஏன், தாராவியில்- மும்பை மாநகரத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியான தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவிலாள ஒற்றுமையும், உலகளவிலான ஒற்றுமையும்தான் கொரோனா வைரஸ் தொற்று நோயின் ஆக்கிரமிப்பை திருப்ப முடியும். தலைமை, சமூக பங்களிப்பு, கூட்டு ஒற்றுமை ஆகிய மூன்றும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
சமூக ஈடுபாட்டில் கவனம் செலுத்துதல், பரிசோதனை நடத்துதல், தொடர்பு தடம் அறிதல், தனிமைப்படுத்துதல், நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்தல் ஆகியவைதான் கொரோனா பரவல் சங்கிலியை தகர்த்து எறிவதில் முக்கியமான காரணிகள் ஆகும்.
-இப்படி சொல்லி இருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம்.
தற்போது தாராவியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிகை 2,359. அதில் 166 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டை தாராவி பெற்றிருப்பது, மராட்டிய அரசுக்கு பெரும் மன நிறைவை அளித்து இருக்கிறது. இதையொட்டி மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார், இப்படி.
“கொரோனா வைரசை துரத்திய எங்கள் தாராவிக்கு இது மிகப்பெரியது. அரசு, மாநகராட்சி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மிக முக்கியமாக தாராவி மக்கள் இதைத் தொடரலாம். இவர்களின் முயற்சிகளை அங்கீகரித்துள்ள உலக சுகாதார நிறுவனத்துக்கு நன்றி”.
Related Tags :
Next Story