கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகம் எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 114 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் நாடு முழுவதுமான கொரோனா தொற்று நிலை, தடுப்பு நடவடிக்கைகள், மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆராய்வதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, நிதி ஆயோக் உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்காக மத்திய, மாநில, உள்ளூர் அதிகாரிகளை பிரதமர் மோடி மனதார பாராட்டினார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பின்பற்றிய அணுகுமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிகள் முக்கியத்துவம் அளித்து வருகிற நிலையில், பிற பொதுவான நோயாளிகளை வேன்களில் வீட்டு வாசலுக்கே டாக்டர்கள் குழுவுடன் சென்று சிகிச்சை அளிக்கும் ‘தன்வந்திரி ரத’ திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதுபற்றி, உயர் மட்ட ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டதுடன், இந்த திட்டத்தின் வெற்றி பற்றியும் எடுத்துக்கூறினார்.
இந்த திட்டத்தை மற்ற இடங்களிலும் பின்பற்றலாம் என அவர் ஆலோசனை வழங்கவும் தவறவில்லை.
நாட்டில் கொரோனாவின் தீவிரமான பாதிப்புக்கு ஆளாகி உள்ள மாநிலங்களிலும், அதிகமான கொரோனா நோயாளிகளை கொண்டுள்ள இடங்களிலும் தீவிரமான கண்காணிப்பு நடத்துவதுடன், பாதிப்பில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தையும், சமூக ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் பற்றிய விழிப்புணர்வை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story