தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா! அதிகாரிகள், மக்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு


தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா!  அதிகாரிகள், மக்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு
x
தினத்தந்தி 12 July 2020 2:29 AM GMT (Updated: 12 July 2020 2:29 AM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது.  தாராவியில் முதன்முதலாக அன்று பாலிகாநகரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானபோது, ஒட்டுமொத்த மும்பையும் கதிகலங்கியது. காரணம், 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 6½ லட்சம் மக்களுக்கும் அதிகமாக வாழ்கிற பகுதி அது.

அதுவும் சின்னச்சின்ன அறைகளில் 10 பேர் வாழ்கிற அளவுக்கு மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி... குறுகலான சந்துக்கள்... அங்கு தனி மனித இடைவெளியை பராமரிப்பது என்பதெல்லாம் பகல் கனவு... அப்படி இருக்கையில் தாராவியில் ஒருவருக்கு கொரோனா என்றால் அங்கு வாழ்கிற அத்தனை பேருக்கும் பரவி விடும் ஆபத்து அருகாமையில் இருந்தது.

ஆனால் 3 மாதங்களில், ஜூன் 9-ந் தேதி நிலவரப்படி அங்கு மொத்தம் 2,347 பேருக்குத்தான் பாதிப்பு. அவர்களில் 1,815 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருந்தார்கள். 291 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 80-க்கும் சற்று அதிகமானோர் மட்டுமே கொரோனாவுக்கு இரையாகி இருந்தனர். மராட்டிய அரசு, மும்பை மாநகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தாராவி மக்கள் என கூட்டு முயற்சியாக செயல்பட்டு தாராவியில் கொரோனாவை கட்டுக்குள் வைத்தனர்.

மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவியில் கொரோனா கட்டுக்குள் வந்ததை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு தாராவியே எடுத்துக்காட்டு என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டினார்.

இந்த நிலையில், தாராவி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ கொரோனா பரவலை கட்டுப்படுத்த நமது நாட்டின் தாராவி பகுதியை உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்காட்டாக கூறியுள்ளது. இந்த சாதனைக்கு தாராவியில்  உள்ள அனைத்து தரப்பும் பொறுப்பாகும். குறிப்பாக அங்கு வசிக்கும் மக்கள், அதிகாரிகள் பாராட்டுக்கு உரித்தானவர்கள்” என்று தெரிவித்தார்.

Next Story