உத்தர பிரதேசத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மினி ஊரடங்கு; அரசு முடிவு


உத்தர பிரதேசத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மினி ஊரடங்கு; அரசு முடிவு
x
தினத்தந்தி 12 July 2020 9:37 AM GMT (Updated: 12 July 2020 9:37 AM GMT)

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வாரத்திற்கு 2 நாட்கள் மினி ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் 913 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரை 22,689 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  11,490 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்புகள் 35,092 ஆக உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நாளை வரை (திங்கட்கிழமை) 55 மணிநேர மினி ஊரடங்கு முன்பே பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி, அத்தியாவசிய மற்றும் பிற சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட்டன.  இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணியுடன் நிறைவடையும்.

ஒவ்வொரு வாரமும் உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதனையடுத்து, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, தொழிற்சாலைகளில் உற்பத்தி, சரக்கு வாகன போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.  வங்கிகள் திறந்திருக்கும்.

ஆனால், அத்தியாவசிய தேவைகளல்லாத அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகிய அனைத்தும் மூடப்படும்.

இந்த நாட்களில், சுகாதார மற்றும் பிற அரசு துறைகள் கிருமி நாசினி தெளித்தல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வாரத்திற்கு 5 நாட்களே இயங்கும்.

Next Story