மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது


மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது
x
தினத்தந்தி 13 July 2020 12:15 AM GMT (Updated: 12 July 2020 10:03 PM GMT)

மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது 8 வயது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடிகை ரேகாவின் பங்களாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மும்பை, 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த மும்பை பங்களா வீட்டு வாசலில் மாநகராட்சி சார்பில் பேனர் தொங்கவிடப்பட்டு இருப்பதையும், மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததையும் படத்தில் காணலாம்.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுடன் உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது.

இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த நோய்க்கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த்தொற்று அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8½ லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது.

இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி இருந்தார்.

அடுத்த சில மணி நேரத்தில் அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான 44 வயது அபிஷேக் பச்சனும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்டார். தனக்கும், தனது தந்தைக்கும் நோய்த் தொற்றின் தாக்கம் லேசாக இருப்பதாகவும், அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் இருவரும் மும்பை வில்லேபார்லேயில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நானாவதி தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், “தந்தை- மகன் இருவரும் தாங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறார்கள். நன்றாக தூங்கினார்கள். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அவர்களது உடல் நிலை சீராக உள்ளது” என்றார்.

பல்வேறு உடல் உபாதைகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமிதாப் பச்சன் ஏற்கனவே சில தடவை கூறி இருக்கிறார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்து அவரது ரசிகர்களை கலக்கம் அடைந்து உள்ளனர்.

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான 46 வயது ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜெயாபச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருப்பதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று மாலை தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளாகாத ஜெயா பச்சனும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுவதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டு உள்ள நானாவதி ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். சாலையில் அவர்கள் கூடி நின்றதால், கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா முன்பும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அந்த பங்களாவிலும், அமிதாப்பச்சனின் அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பங்களா ‘சீல்‘ வைக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டது. இதுதவிர மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் மேலும் பங்களாக்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.



 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த மும்பை பங்களா வீட்டு வாசலில் மாநகராட்சி சார்பில் பேனர் தொங்கவிடப்பட்டு இருப்பதையும், மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததையும் படத்தில் காணலாம்.







அமிதாப் பச்சன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டு அறிந்தனர்.

அமிதாப்பச்சனுக்கு யார் மூலம் கொரோனா தொற்று பரவியது என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதோடு, அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசன் மகளும், பிரபல இந்தி நடிகையுமான ரேகாவின் பங்களா மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ளது. அங்கு பாதுகாவலராக பணியாற்றுபவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் ரேகாவின் பங்களாவுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். பங்களாவின் வாசலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இல்லம் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. நடிகை ரேகா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ரேகாவுக்கும், அவரது வீட்டு பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நடிகர் அமீர்கான், டைரக்டர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் வீடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பது இந்திப்பட உலகினரிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அப்போது, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அமிதாப்பச்சன் உடல் நல பிரச்சினையில் இருந்து மீண்டு வருவார். இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்“ என்று கூறி உள்ளார்.

இதேபோல் நடிகர்கள் மம்முட்டி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் அமிதாப்பச்சனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


Next Story