பாகிஸ்தான் நிதியுதவியில் போதை பொருள், ஆயுதம் கடத்தல்; போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேர் கைது
பாகிஸ்தான் நிதியுதவியுடன் போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்து உள்ளனர்.
சண்டிகர்,
இந்தியாவில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவுடன் இதுபோன்ற கடத்தல் கும்பல் செயல்படுகிறது என உளவு தகவல் வெளியானது.
இதில், இந்த கும்பல் எல்லை பகுதி வழியே ஊடுருவி நாட்டிற்குள் நுழைந்து போதை பொருட்கள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பஞ்சாப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், எல்லை பாதுகாப்பு படையை (பி.எஸ்.எப்.) சேர்ந்த கான்ஸ்டபிள் சுமித் குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவரது தலைமையிலேயே இந்த கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சுமித் பணியாற்றி வந்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பஞ்சாப் போலீசார், துருக்கி நாட்டில் தயாரித்த கைத்துப்பாக்கி ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெயர் பொறித்த 80 துப்பாக்கி தோட்டாக்கள், 2 தோட்டா உறைகள் மற்றும் பெரிய ரக துப்பாக்கிகளுக்கான 2 தோட்டாக்கள் உள்ளிட்ட வெளிநாட்டில் தயாரித்த ஆயுதங்கள் மற்றும் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தேச பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரே வெளிநாட்டு ஆதரவுடன் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story