பங்களாவை காலி செய்ய அதிக காலம் அரசிடம் கோரியதாக கூறப்படுவதை பிரியங்கா காந்தி மறுத்தார்


பங்களாவை காலி செய்ய அதிக காலம் அரசிடம் கோரியதாக கூறப்படுவதை பிரியங்கா காந்தி மறுத்தார்
x
தினத்தந்தி 14 July 2020 1:54 PM IST (Updated: 14 July 2020 1:54 PM IST)
t-max-icont-min-icon

"போலி செய்தி": பங்களாவை காலி செய்ய அதிக காலம் அரசிடம் கோரியதாக கூறப்படுவதை பிரியங்கா காந்தி வதேரா மறுத்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு அதிகபட்ச பாதுகாப்பான சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

பிரதமருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமராக இருந்தால், பதவி விலகிய 5 ஆண்டுகள் வரை அவருக்கும், அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த திருத்தம் கூறியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணமடைந்து சுமார் 30 ஆண்டுகள் நெருங்குவதால், அவருடைய குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கடந்த ஆண்டு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. கருப்பு பூனைப்படை பாதுகாப்போ, எந்த அரசு பதவியோ இல்லாதவர்களுக்கு அரசு பங்களா வசதி அளிக்க விதிமுறையில் இடம் இல்லை என்று சுட்டிக்காட்டி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகஸ்டு 1-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் பிரியங்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, கூடுதல் காலம் அங்கு வசிக்க பிரதமர் மோடி அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை பொய் செய்தி என்று டுவிட்டர் பதிவில் மறுத்துள்ளார்.

"இது போலியான செய்திநான் அரசாங்கத்திடம் இதுபோன்ற எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஜூலை 1 ஆம் தேதி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தின் படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் 35 லோதி தோட்டத்திலுள்ள அரசு பங்களாவை காலி செய்வேன்," என்று அவர் கூறி உள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பேஸ்புக்கில் ஒரு மறுப்பை வெளியிட்டார், மேலும் காலக்கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பம் வெளியேறுவதாக கூறினார்.

"இது முற்றிலும் தவறானது !! நாங்கள் தங்குவதற்கு எந்த நீட்டிப்பும் கேட்கவில்லை. ஜூலை 1 ஆம் தேதி 30 நாட்களில் வெளியேறுமாறு எங்களுக்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது.ஒரு வாரத்திற்கு முன்பு,நாங்கள் காலிசெய்வோம் என கூறி உள்ளார்.


Next Story