கொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் - மத்திய அரசு தகவல்
நாட்டில் சிகிச்சை பெற்று வருகிற கொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிற நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 11 ஆயிரத்து 365 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கையில் பாதிப்பேர் (50 சதவீதத்தினர்) மராட்டியத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என மத்திய சுகாதார அமைச்சக சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மராட்டியத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 935 பேரும், தமிழகத்தில் 48 ஆயிரத்து 199 பேரும் இரு மாநிலங்களிலும் சேர்த்து 1 லட்சத்து 54 ஆயிரத்து 134 பேரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுகிற 3 லட்சத்து 11 ஆயிரத்து 565 கொரோனா நோயாளிகளில் 86 சதவீதத்தினர் மராட்டியம், தமிழகம், கர்நாடகம், டெல்லி, ஆந்திரா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத், அசாம் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை (5 லட்சத்து 71 ஆயிரத்து 459), சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் 22 மாநிலங்கள் 10 லட்சம் பேருக்கு 140 என்ற அளவில் கொரோனா பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. இறப்பு வீதத்தை பொறுத்தமட்டில் தேசிய விகிதாசாரம் 2.6 சதவீதம் என்றும், அது வேகமாக குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய இறப்பு வீதத்துடன் இந்திய இறப்பு வீதத்தை ஒப்பிட்டால் அது கணிசமாக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story