தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேசுடன், கேரள மந்திரி பலமுறை போனில் பேசியது என்ன? - பரபரப்பு தகவல்கள்
தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேசுடன், கேரள மந்திரி பல முறை போனில் பேசியது என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை வருகிற 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறப்பு கோர்ட்டு அனுமதியுடன் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர், அந்த குழுவினர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதற்கிடையே என்.ஐ.ஏ. அதிகாரிகளின் அதிரடி விசாரணையில் கடந்த மாதம் (ஜூன்) கேரள மந்திரி கே.டி. ஜலீல், ஸ்வப்னா சுரேசுடன் பலமுறை போனில் பேசியது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து மந்திரி கே.டி. ஜலீல் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் தொடர்பான சில பணிகளுக்காக ஸ்வப்னா சுரேசுடன் பலமுறை பேசியது உண்மை. ஆனால், தங்கம் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார்.
மேலும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான சரித்துடன், முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பல முறை போனில் பேசியதும், அதற்கான ஆதாரங்களையும் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
நேற்று மாலை சிவசங்கரனை விசாரணைக்கு அழைக்க சுங்கத்துறை அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திடீரென வந்தனர். பின்னர், 10 நிமிடத்தில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் வீட்டின் பின் வாசல் வழியாக சிவசங்கரன் சுங்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்-மந்திரி அலுவலகம் உடந்தையாக இருந்துள்ளது. அதற்கு முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் சிவசங்கரன் மூல காரணமாக இருந்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 17-ந்தேதிகளில் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தவும், 22-ந் தேதி பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் தலைமை செயலகம் முன் சத்தியாகிரக போராட்டம் நடத்தவும், 27-ந் தேதி கேரளா முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story