இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக தினமும் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் இந்த 28 ஆயிரத்து 498 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், புதிதாக 553 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆகவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 727 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் 1 லட்சம் பேரை பாதிப்புக்குள்ளாக்க முதலில் கொரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அதில் பாதி நாட்களில், அதாவது 56 நாட்களிலேயே மேலும் 8 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த ஆட்கொல்லி வைரஸ். நாட்டில் கடந்த 11-ந் தேதி கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது. இந்த நிலையில் 3 நாளில் அந்த எண்ணிக்கை 9 லட்சத்தை தொட்டுவிட்டது.
ஒட்டுமொத்த மக்களும் கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயமாக இந்த நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கைதான் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த நோய்க்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 460 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 லட்சத்து 11 ஆயிரத்து 565 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருந்து வரும் மராட்டிய மாநிலத்தில், தினந்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் சுமார் 6,500 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 193 பேர் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 482 பேர் அங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆகவும், பலி 2,099 ஆகவும் இருந்து வருகிறது. 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,411 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா 5-வது இடத்துக்கும், ஆந்திரா 9-வது இடத்துக்கும் சென்றுள்ளது. கேரளாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது அங்கும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,531 ஆக உள்ளது.
Related Tags :
Next Story