ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - பதவி இழப்பார்களா?


ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் - பதவி இழப்பார்களா?
x
தினத்தந்தி 16 July 2020 3:00 AM IST (Updated: 16 July 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

ஜெய்ப்பூர், 

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், இதனால் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை.

இந்த நிலையில், சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த 13-ந் தேதி நடத்தினார். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், சட்டசபை கட்சி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அதேசமயம் அசோக் கெலாட்டுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால், அரசுக்கு ஆபத்து இல்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.

சச்சின் பைலட்டின் நடவடிக்கைகளால் மிகுந்த அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று முன்தினம் அவரை துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அத்துடன் அவரது ஆதரவு மந்திரிகளான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மேனா ஆகியோரையும் நீக்கினார். மேலும் சச்சின் பைலட்டிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அத்துடன் அவரது ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில், கொறடா உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது அரசியல் சாசனத்தின் 10-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதி இருந்தார். அவர்கள் கட்சி நலனுக்கு விரோதமாகவும், அரசுக்கு எதிராகவும் செயல்பட்டதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து, தங்களை ஏன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி சச்சின் பைலட்டுக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் சி.பி.ஜோஷி நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த தகவலை நேற்று அவர் தெரிவித்தார்.

இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

Next Story