கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையில் மலிவு விலை மருந்துகளை ஊக்குவிக்காதது ஏன்? - நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையில், மலிவு விலை மருந்துகளை ஊக்குவிக்காதது ஏன் என்று மூத்த அரசு அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி,
உலகையே கலங்கடித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் 9.36 லட்சம் பேர் இந்த தொற்று நோயால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 5.92 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 3.19 லட்சம்பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையில் நடந்தது.
இதில் நிலைக்குழு உறுப்பினர்களும், உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும், இணைச்செயலாளர் லாவ் அகர்வாலும், மூத்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அப்போது கட்சி வித்தியாசமின்றி உறுப்பினர்கள், கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையில் எதற்காக விலை உயர்ந்த மருந்துகள் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினர்.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்குரிய மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது குறித்து உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தின்போது, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான 3 மலிவு விலை மருந்துகளை குறிப்பிட்ட உறுப்பினர்கள். இவை மலிவானவை, எளிதில் கிடைக்கக்கூடியவை, பயனுள்ளவை என்கிறபோதும் எதற்காக ஊக்குவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story