கொரோனா பாதிப்பு; பிரசாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கொரோனா பாதிப்புகள் உள்ள சூழலில் தேர்தல் பிரசாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவால் மேலும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 25,602 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து ஏற்பட்டு வரும் இதுபோன்ற அச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகிற அக்டோபரில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டிக்கு தயாராகி வருகின்றன.
பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் சூழ்ந்துள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது கூட்டங்கள் ஆகியவை பற்றிய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதேபோன்று இந்த ஆலோசனைகளை வரும் 31ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என காலக்கெடு விதித்து உள்ளது.
Related Tags :
Next Story